ஆகஸ்ட் 15, 2010

ஜாவாவும் சுதந்திரமும் - ஜாவா தொடர் 3

ஜாவாவும் சுதந்திரமும் - ஜாவா தொடர் 3
சுதந்திர தின நல்வாழ்த்துகள்



இங்கு சுதந்திரம் என்பது ஓப்பன் சோர்ஸைக் குறிக்கிறது.  ஜாவாவில் எழுதப்பட்ட கட்டற்ற திறமூல மென்பொருட்கள் நிறைய உள்ளன.  ஜாவா, ஓப்பன் ஆபிஸ் இரண்டுமே சன் மைக்ரோசிஸ்டம் வழிவந்ததால் ஓப்பன் ஆபிஸ் ஜாவாவில் உருவாக்கப்பட்ட மென்பொருள் என்பதை சொல்லித் தெரிய வேண்டுமா?

ஜாவா இணைய பயன்பாடுகளை(Web applications) உருவாக்குவதற்கு ஏற்ற மென்பொருள்.  தனிமேசை பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கத்தைவிட இணையப் பயன்பாடு உருவாக்கத்தில் ஜாவா கோலோச்சி நிற்கிறது.  ஜாவா மொழி பலரால் பயன்படுத்தப் படாமாலா இன்று கணினி உலகில் நம்பர் ஒன் மொழியாக இருக்கிறது. 

ஒவ்வொரு ஆண்டும் நிரல் மொழிகளுக்கு தரவரிசையை வழங்கும் டையோப் நிறுவனத்தின் அறிக்கையைப் பாருங்கள்.  கடந்த சில வருடங்களாக ஜாவா மொழி தொடர்ச்சியாக முதலிடத்தில் இருப்பதைக் காணலாம்.



ஜாவாவின் மிகப்பெரிய பலம் பணிச்சூழல் சாராமை (platform independence).  ஜாவாவில் உருவாக்கத்தில் இருக்கும் ஒரு திட்டப்பணியை (project) எப்போது வேண்டுமானாலும் எந்த இயக்கச் சூழலுக்கும் மாற்றிக் கொள்ளலாம். மென்பொருள் நிறுவனங்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். வாடிக்கையாளர் யுனிக்ஸ் அல்லது விண்டோசில் இயங்கக் கூடிய ஒரு பயன்பாட்டை கேட்கிறார் என வைத்துக் கொள்வோம்.   அதை நீங்கள் உங்களிடம் இருக்கும் இயங்குதளத்திலேயே வடிவமைக்கலாம்.  ஒரு திட்ட அறிக்கையை பகுதி பகுதியாக (modularization) பிரித்துக் கொண்டு ஒருவர் லினக்சிலும், மற்றொருவர் யுனிக்ஸ் விண்டோஸ் போன்ற சூழலிலும் உருவாக்கலாம்.

ஜாவாவின் அடிப்படைக் கொள்கை ஒருமுறை எழுதிவிட்டு எங்கு வேண்டுமானாலும் இயக்கிக் கொள்ளுங்கள் (WORA - Write once run
anywhere) என்பதே.   

பல பயனுள்ள துணைநிரல்களை (libraries) ஜாவா மொழி தாங்கி வருகின்றது.  இது நிரலாக்கத்தில் அடிக்கடிப் பயன்படும் ஒரு தேவைக்கு ஏற்கனவே நன்கு பரிசோதிக்கப்பட்ட, நம்பகமான, தரமான துணைநிரல்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  எடுத்துக்காட்டிற்கு தரவு கட்டமைப்பில் (data structure) இருக்கும் அடுக்கு (stack) பயன்பாட்டிற்கு (push/pop) நீங்கள் நிரலெழுதிக் கொண்டிருக்கத் தேவையில்லை.    java.util.* தொகுப்பில் (package) வரும் Stack வகுப்பை (class) பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜாவாவிற்கு முற்றிலும் புதியவர்கள் புரியாத வரிகளைத் தவிர்த்துவிட்டு தொடரவும்.   இவை ஒவ்வொன்றையும் அடுத்தடுத்த கட்டுரைகளில் அலசி
ஆராய்வோம்.

ஜாவாவை சன் மைக்ரோசிஸ்டமஸ் சொந்தம் கொண்டாடினாலும்,  ஜாவாவுடன் பயன்படுத்தும் நிரலாக்க சட்டங்கள் (frameworks), துணை
நிரல்கள் (libraries) அனைத்திற்கும் அவர்கள் சொந்தக்காரர்கள் அல்ல.  சன் மைக்ரோசிஸ்டம்ஸ் அறிமுகப் படுத்திய ஜாவா விவர வரையறைகளில் (java specifications servlet,ejb etc..) சில மிகக் கடினமாக இருந்தது. அதுவே ஜாவாவை பலர் வெறுப்பதற்கும் காரணம் ஆயிற்று.  

ஜாவாவில் மென்பொருள் உருவாக்குவதை எளிமையாக்க பல்வேறு நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்துள்ளன.  அவர்கள் பணம் வீணாய்ப் போக விட்டுவிடுவார்களா என்ன?  ஐ.பி.எம், கூகிள் போன்ற நிறுவனங்களும் இதில் அடக்கம்.  கூகிள் GWT - Google Web Toolkit என்றொரு நிரலாக்க சட்டத்தை (framework+tools) ஜாவாவிற்கு தருகிறது.  அஜாக்ஸ் (AJAX - Asynchronous JavaScript and XML ) முறையிலான வெப் பயன்பாடுகளை உருவாக்குவற்கு ஏற்றது.  ஜிமெயில், கூகிள் மேப்ஸ் போன்ற பயன்பாடுகளை உருவாக்க GWT பெரிது உதவும்.  இது கட்டற்ற திறமூல மென்பொருள் என்பதால் ஆர்வத்தை அதிகரிக்கின்றது.  ஐ.பி.எம், அப்பாச்சி அறக்கட்டளை... போன்றவற்றின் ஆதரவால் ஜாவா இன்றளவும் முதலிடத்தில் இருக்கிறது.


ஜாவா என்பது நிரலாக்க மொழி மட்டும் இல்லை.  ஜாவா என்பது ஜாவா நிரல் மொழியையும் உள்ளடக்கிய பணிச்சூழல் (java is not a programmiing language alone. java is a platform which includes java programming language itself).

ஆகவே உங்களுக்கு ஜே.எஸ்.பி, சர்வலெட், இ.ஜே.பி இவையெல்லாம் தெரியாதென்றால் உங்கள் சுயவிவர (Resume) அறிக்கையில் மொட்டையாக ஜாவா என்று எழுதிவிடக் கூடாது.  வெறுமனே ஜாவா என்றால் அது மொத்த ஜாவா பணிச்சூழலையும் குறிக்கும்.  எனவே ஜாவா நிரல் மொழியை மட்டும் அறிந்த நண்பர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பில் "core java" என்று குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சன் மைக்ரோ சிஸ்டத்தைக் கையகப்படுத்தியதன் மூலம் இன்று ஜாவா ஆரக்கிள் நிறுவனத்தின் வசம் இருக்கிறது.  வணிக மென்பொருள் சந்தையில் வெற்றிக் கொடி நாட்டிய ஆரக்கிள் ஜாவாவை சுதந்திரமாக இருக்க அனுமதிக்குமா?

உங்கள் நல்லாதரவுடன் ஜாவா தொடர் ...தொடரும்

7 கருத்துகள் :

  1. புரியாத விபரங்களை விட்டுவிட்டு தொடர்ந்து படித்தால் பயன் பெறும் நம்பிக்கை வருகிறது...தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. வலைபூவில் பதிவு செய்துவிட்டேன்... நன்றி நண்பரே...

    தொடர்ந்து பதிவுகளை இடவும்.

    பதிலளிநீக்கு
  3. என்னுடைய நண்பர்களுக்கும் இந்த வலை பூவை அறிமுகம் செய்கிறேன்.
    தொடர்ந்து பதிவுகளை இடவும்.

    பதிலளிநீக்கு
  4. // தொடர்ந்து பதிவுகளை இடவும்.

    கண்டிப்பாக. ஓரிரு நாட்கள் தாமதப்பட்டால் பொறுத்தருளவும்.

    பதிலளிநீக்கு
  5. ஆரக்கிள் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார்கள்.. முதல் பலிகடா கூகுள்

    பதிலளிநீக்கு
  6. முதலில் ஆங்கில வார்த்தையை பாவிக்கவும்.
    உதாரணம் frameworks (சட்டங்கள்)

    பதிலளிநீக்கு
  7. திரு.அஸ்பர் இரண்டும் ஒன்றுதானே. தமிழில் எழுதினால் புரியாது என்பதற்குத்தானே ஆங்கிலத்தில் அடைப்புக்குறியில் எழுதுகிறேன். ஆங்கிலத்தில் முதலில் எழுதினால் தமிழில் அறியும் ஆர்வம் போய்விடும் என்பது என் கருத்து. ஏதேனும் தவறாக இருந்தால் உரிமையாய் சுட்டிக்காட்டவும். நன்றி.

    பதிலளிநீக்கு