நவம்பர் 06, 2011

நாலு கால் பாய்ச்சலில் ஜாவாஸ்கிரிப்ட்


ஜாவாஸ்கிரிப்ட் (javascript) கோடிக்கணக்கான இணையதளங்களில் பயன்படுத்தப்படும் ஒரு ஸ்கிரிப்டிங் மொழி.  நெட்ஸ்கேப் (Netscape) நிறுவனத்தால் 1995ல் வெளியிடப்பட்டது.  இதன் ஆரம்பகால பெயர் லைவ்ஸ்கிரிப்ட் (LiveScript) என்பதாகும்.  ஜாவா மொழியை உருவாக்கிய சன் மைக்ரோசிஸ்டம்ஸ் (Sun MicroSystems) நெட்ஸ்கேப் நிறுவனத்தை கையகப்படுத்திய பின்னர், ஜாவா விளம்பர யுக்திக்காக லைவ்ஸ்கிரிப்டை ஜாவாஸ்கிரிப்ட் என பெயர் மாற்றியது.  மற்றபடி ஜாவாவும் ஜாவாஸ்கிரிப்ட்டும் இருவேறு துருவங்கள்.  இரண்டு மொழிகளும் வெவ்வேறு காரணங்களுக்காக வடிவமைக்கப் பட்டவை. 1996 நவம்பர் மாதத்தில் நெட்ஸ்கேப் நிறுவனம் இணைய தொழில்நுட்பங்களை தகுதரப்படுத்தும் (internet standards) ECMA அமைப்பிடம் ஒப்படைத்தது. ECMA நிறுவனம் ஜாவாஸ்கிரிப்ட்டை ECMAScript என பெயரிட்டது.  இவர்கள் மட்டுமல்லாமல் மைக்ரோசாப்ட் (Microsoft) சில மாற்றங்களை செய்து jScript என்றும், அடோப் (Adobe) நிறுவனம் ActionScript என்றும் ஆளுக்கொரு பெயர் வைத்தனர்.  ஜாவாஸ்க்ரிப்ட்டை மேம்படுத்துவதில் மொசில்லா (Mozilla) நிறுவனம் இன்று பெரும் பங்களிப்பைச் செலுத்துகிறது.இணைய பயன்பாடு பெருகிவிட்ட இக்காலத்தில் ஜாவாஸ்கிரிப்ட்டை வேகமாய் இயங்க வைக்க மைக்ரோசாப்ட், கூகிள், மொசில்லா, ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் அதிவேக உலாவிகளை (browsers) பரிசளித்துள்ளன.  ஜாவாஸ்க்ரிப்ட் பெரும்பாலும் இணைய பக்க வடிவமைப்புகளில் (web page design) மட்டுமே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.  இன்று இணைய பக்கங்களுடன் மட்டும் நின்றுவிடாமல் டெஸ்க்டாப் (desktop) அப்ளிகேஷன்ஸ், விட்ஜெட்ஸ், ப்ரவுசர் ப்ளகின்ஸ் (browser plugins), சர்வர், டேட்டாபேஸ் என பல பரிமாணங்களில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

ஜாவாஸ்கிரிப்ட்டை ஜாவா, சி, சி# போன்ற மொழிகளுடன் ஒப்பிடக் கூடாது.  பாதுகாப்பு கருதி பயனருடைய ஃபைல்களை (files) திறக்க முடியாது போன்ற அம்சங்களை மொழி அமைப்பிலேயே பெற்றிருக்கிறது.  இணைய பக்கங்களுக்கு வெளியேயும் (desktop, server side application) ஜாவாஸ்கிர்ப்ட்டை மென்பொருள் உருவாக்கத்திற்கு பயன்படுத்த CommonJS என்கிற திட்டம் செயல்படுகிறது.

சர்வர் தொழில்நுட்பத்தில் node.js திட்டம் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி வருகிறது.  பின்புலத்தில் asp, php, servlet, python, ruby போன்ற மொழிகளுக்கு பதில் ஜாவாஸ்கிரிப்ட்டையே பிரவுசர் வேண்டுதல்களுக்கு (serving response from javascript itself) பயன்படுத்த முடியும்.  அதேபோல ஜாவாஸ்கிப்ட் டேட்டாவை சேமிக்க டாக்குமெண்ட் ஸ்டோர்களாகவும் பயன்படுகிறது.  MongoDB, CouchDB போன்ற NoSQL டேட்டாபேஸ்களை ஜாவாஸ்கிப்டுடன் பயன்படுத்தலாம்.  நீங்கள் ஜாவாஸ்கிரிப்ட் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டால் ஆரம்பத்திலேயே jQuery ஜாவாஸ்கிரிப்ட் லைப்ரரியையும் கற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.