மே 14, 2012

HTML பக்கங்களை அழகு படுத்தும் CSS

CSS, Cascading Style Sheetன் சுருக்கம். இணையதள வடிவமைப்பில் CSSன் பங்கு இன்றியமையாத ஒன்று.  CSS என்பது புரோகிராமிங் மொழியும் அல்ல அல்லது HTML போன்ற மார்க்கப் மொழியும் அல்ல.  CSS என்பது பக்க வடிவமைப்பிற்கான கட்டளைகளின் தொகுப்பு. கண்ணைக் கவரும் வகையில் உள்ள இணையதளங்களை CSS கட்டளைகளே அழகூட்டுகிறது. ஒரு இணையப் பக்கம் என எடுத்துக் கொண்டால் அதன் உள்ளடக்கம் (content) HTMLலில் எழுதப் பட்டிருக்கும், பலவகை வண்ணங்கள், பக்க வடிவமைப்பு போன்றவை CSSசிலும், நிரலாக்கம் (programming logic) ஜாவாஸ்கிரிப்டிலும் எழுதப்பட்டிருக்கும்.

CSS கட்டளைகளை html பக்கத்தில் உள்ளேயாகவோ அல்லது தனி fileஆகவோ எழுதிக் கொள்ளலாம்.  HTML பக்கத்தின் உள்ளேயே CSS கட்டளைகளை <style> </style> டேகினுள் (internal style) அல்லது ஒரு டேகின் style attribute மூலம் (inline style)எழுத வேண்டும்.  HTML கலப்பில்லாமல் CSS கட்டளைகளை மட்டும் எழுதினால் அதை .css நீட்டிப்பில் சேமித்துக் கொள்ளலாம். அப்படி தனி fileலாக இருக்கும் css கட்டளைகளை <link></link> டேக் வழியாக (external style) HTMLலில் இணைக்க முடியும்.

இப்படி css எழுதும் முறைகளையே
1. Internal css
2. Inline css
3. External css என மூன்று வகையாகப் பிரிக்கின்றனர்.

CSS கட்டளைகளை எழுதுவதற்கென தனி மென்பொருள் தேவையில்லை. ஏதேனும் ஒரு டெக்ஸ்ட் எடிட்டரில் எழுதலாம்.
இருப்பினும் பணிகளை எளிமைப்படுத்த ஏகப்பட்ட மென்பொருட்கள் இருக்கின்றன.  CSS கட்டளைகளை எழுத Notepad++, Gedit, Visual Studio, Eclipse, Netbeans, WebStorm editor, Sublime, BlueFish editor, Dreamweaver, Aptana Studio என அவரவர் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளவும். வெப் டிசைனிங்கில் நாட்டம் உள்ளவர்கள் Dreamweaver studio, Apdtana Studio போன்ற மென்பொருட்களப் பயன்படுத்துங்கள். ஜாவா புரோகிராமர்கள் Eclipse, Netbeans போன்ற மென்பொருட்களிலேயே வடிவமைத்துக் கொள்ள முடியும். டாட் நெட் புரொகிராமர்களுக்கு இருக்கவே இருக்கிறது Visual Studio.

குரோம் பிரவுசரில் html பக்கத்தை திறந்து கொள்ளுங்கள். பின்னர் வலது க்ளிக் செய்து Inspect element தேர்ந்தெடுப்பதன் மூலமும் அந்தபக்கத்திற்கான css கட்டளைகளைக் காண முடியம். தற்காலிமாக css கட்டளைகளை மாற்றி உடனுக்குடன் மாற்றங்களைப் பார்க்க முடியும்.

மொசில்லா ஃபயர்பாக்ஸ் பயன்படுத்துவோர் Firebug என்கிற addon நிறுவிக் கொள்ளவும். இதுகுறித்து வேறொரு பதிவில் விவரமாகப் பார்க்கலாம்.

மே 03, 2012

மொபைல் மென்பொருள் உருவாக்கம் - வெப் டிசைனர்கள் கவனத்திற்கு...

மொபைல் மென்பொருள் உருவாக்கத்தில் சந்திக்கும் மிகப்பெரிய சவால் வெவ்வேறு வகையான மொபைல்களுக்கு தீர்வுகள் வழங்குவது. ஒவ்வொன்றும் ஒருவகை. ஆண்ட்ராய்ட், ஐபோன், நோக்கியா, கீக்கியா என ஆயிரத்தெட்டு வகைகளுக்கும் அத்தனை விதமாக புரொகிராம் எழுதினால் எங்கே போவது? அனைத்து மொபைல் பயனாளர்களையும் உள்ளடக்கா விட்டாலும் குறைந்தது எந்தளவு அதிகமாக் கொண்டு சேர்க்க வேண்டுமோ அந்தளவிற்கு சிக்கல்களும் பொருட்செலவும் மிகுந்ததாக இருக்கும். பயனர்களுக்கு தான் எந்த இயக்கச் சூழல் பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. அவர்களுக்குத் தேவை தீர்வுகள் மட்டுமே. எடுத்துகாட்டிற்கு விண்டோசில் பயன்படுத்தும் ஃபயர்பாக்ஸ், குரோம், லிபர் ஆப்பிஸ், வி.எல்.சி போன்ற மென்பொருட்களின் அதே வசதிகள் லினக்ஸ், யுனிக்ஸ், மேக் என எல்லாக் கணினிகளிலும் கிடைக்கிறது. இதே விதி மொபைல் பயன்பாடுகளுக்கும் பொருந்தும். ஐபோனில் ஆங்க்ரி பேர்ட்ஸ் கிடைக்கும்போது ஆண்ட்ராய்ட் பயனாளர்களும் அதை எதிர்பார்ப்பது இயற்கைதானே. இவ்வாறான தேவைகள் மொபைல் சாதனங்களுக்கான மென்பொருள் உருவாக்கத்தை சிக்கல் நிறைந்ததாகவும் அதிக செலவு பிடிப்பதாகவும் ஆக்கி விடுகிறது.

எடுத்துகாட்டிற்கு ஒரு வங்கி தன் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் தீர்வுகளை தர விழைந்தால், குறிப்பிட்ட மொபைல் வைத்திருப்பவர்களுக்கு (ஐபோன் மட்டும்) மட்டும் தர விரும்பாது. தனக்கு ஆண்ட்ராய்ட், ஐபோன் இரண்டிலும் வேண்டுமென ஒரு மென்பொருள் நிறுவனத்தை அணுகும்போது அதற்கேற்ப கூடுதல் செலவு பிடிக்கும். எனக்கு ஐபோனில் உள்ளதை ஆண்ட்ராய்டுக்கு மாற்றிக் கொடு, அதிலிருப்பது இதிலும் வேண்டும் என வரும் பிராஜெக்டுகளே அதிகம். ஒரே நேரத்தில் ஆண்ட்ராய்ட்டில் பணியாற்றக் கூடிய குழுவையும், ஐபோனுக்கு பணியாற்றும் வேறொரு குழுவையும் நிர்வகிப்பது பெரிய தலைவலி பிடித்த வேலை. காரணம் ஒன்றில் உருவாக்குவது மற்றொன்றில் அப்படியே வேலை செய்யாது. சிறு சிறு மாற்றங்கள் செய்தால் போதுமென்றால் வெவ்வேறு மொபைல்களுக்கு வேறுபாடே இல்லாமல் போயிருக்கும்.ஆண்ட்ராய்டுக்கு மென்பொருள் உருவாக்க விண்டோஸ், லினக்ஸ், மேக் என எந்தக் கணினியிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் ஐபோன், ஐபேட் ஆகியவற்றுக்கு மேக் ஓ.எஸ் மட்டுமே பயன்படுத்த முடியும். மேக் ஓ.எஸ் இயங்கு தளத்தை நினைத்த கணினியிலெல்லாம் நிறுவிட முடியாது. அதற்கென பிரத்யேக கணினிகளை வாங்க வேண்டும். அதில் பயன்படுத்தும் மென்பொருள் உருவாக்க கருவிகளிலிருந்து புரொகிராமிங் மொழி வரை ஒவ்வொன்றும் மாறுபடுகிறது. இந்த சிக்கல்களை தீர்க்க வல்ல ஒரு ஓப்பன்சோர்ஸ் தீர்வே ஃபோன்கேப். மொபைல் மென்பொருள் உருவாக்கத்தில் இருக்கும் இடைவெளியை குறைக்க ஃபோன்கேப் முனைகிறது. எப்படி எச்.டி.எம்.எல் லில் உருவாக்கும் இணையப் பக்கம் விண்டோஸ், லினக்ஸ், மேக் என அனைத்து இயக்கச் சூழல்களிலும் இயங்குகிறதோ, அதே தொழில்நுட்பத்தை மொபைல் மென்பொருள் உருவாக்கத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது வெப் டெவலப்பர்களுக்கு எவ்வளவு இனிப்பான செய்தி?!. தங்களது html, css, javascript திறமைகளை அப்படியே மொபைல் மென்பொருள் உருவாக்கத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுமட்டும் இல்லாமல் மொபைலில் இருக்கும் கேமரா, முகவரிகள் போன்ற வசதிகளையும் ஜாவாஸ்கிரிப்ட் மூலமாகவே அணுக முடியும். இணைய பக்கங்களை உருவாக்க உதவும் எந்த மென்பொருட்களையும் (Dreamweaver, Visual Studio, Eclipse etc...) இதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.