ஜனவரி 12, 2014

வலைப்பக்க உருவாக்கக் கருவி Brackets editor

         வலைதள வடிவமைப்பிற்கு HTML, CSS ,Javascript போன்ற பல தொழில்நுட்ப மொழிகளை பயன்படுத்த வேண்டும்.  வலைதள வடிவமைப்பிற்கென்றே பல உருவாக்கக் கருவிகள் உள்ளன.  முதல்முறையாக பயிலும் புதியவர்கள் Notepad, Notepad++,  Gedit போன்ற டெக்ஸ்ட் எடிட்டர்களை ஆரம்ப நிலையிலும், தொழில்முறை வடிவமைப்பாளர்கள் Dreamwork, VisualStudio, AptanaStudio,FireBug, Sublime, Chrome Developer Tools... போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்துகின்றனர்.  இது ஒவ்வொரு வடிவமைப்பாளரைப் பொருத்தும், அவர் பயன்படுத்தும் இயக்கச்சூழல் (OS) பொருத்தும் மாறுபடும்.      இவ்வரிசையில் Brackets என்கிற புதிய மென்பொருள் கருவி சேர்ந்துள்ளது.  முதல் முறை பயன்படுத்துபவரை திரும்பப் திரும்ப பயன்படுத்த வசீகரிக்கும் இக்கருவி முற்றிலும் இலவசமாகக் கிடைப்பது சிறப்பு.  இலவசமாக மட்டுமல்ல இது ஒரு திறமூல மென்பொருள் (open source) என்பது கூடுதல் சிறப்பு. 


எந்த தொழில்நுட்பத்திற்காக உருவாக்கப் பட்டதோ, அதே தொழில்நுட்பத்தில்தான் இது உருவாக்கப் பட்டிருக்கிறது.  அதாவது HTML5, Javascript மூலமாக உருவாக்கப்பட்ட தனிமேசைக் கருவி (desktop application).  அடோப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு திறமூலமாக வெளியிடப்ப இக்கருவியின் வளர்ச்சியில், உலகெங்கிலும் இருக்கும் ஜாவாஸ்கிரிப்ட் டெவலப்பர்கள் பங்களிக்கிறார்கள்.  இதை உருவாக்கியவர்கள் தத்தம் பயன்பாட்டிற்கு எவையெல்லாம் சிறப்பு சேர்க்குமோ அனைத்தையும் பார்த்து பார்த்து சேர்த்திருக்கிறார்கள்.தொடக்க நிலையில் மேக் இயக்கச் சூழலில் மட்டும் வெளிவந்த இக்கருவி தற்போது விண்டோஸ், உபுண்டு இயக்கச் சூழலிலும் கிடைக்கிறது.  இக்கருவிக்கான நீட்சிகள் (extensions) ஜாவாஸ்கிரிப்டிலேயே எழுதப்படுவதால் எண்ணற்ற கூடதல் வசதிகளைக் கூட்டிக் கொள்ளலாம்.