ஆண்ட்ராய்ட் மென்பொருள் உருவாக்கத்திற்கு கூகுள் நிறுவனம் ஒரு புதிய மென்பொருளை வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் ஸ்டூடியோ எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கருவி, ஜாவா மென்பொருள் உருவாக்கக் கருவியான Jetbrains IntelliJ IDEAயாவைத் தழுவியது. ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஆண்ட்ராய்ட் டெவலப்மெண்ட் கருவியை (ADT) விட இந்த புதிய மென்பொருள் பயன்படுத்த எளிமையானதாகவும், வேகமானதாகவும், பல்வேறு சிறப்பம்சங்களுடனும் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் மென்பொருள் உருவாக்கத்திற்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இக்கருவி நீண்ட நாட்களாகவே எதிர்பார்த்திருந்த ஒன்று.
ஆண்ட்ராய்ட் ஸ்டுடியோ Gradle என்கிற புதிய build systemஐ பயன்படுத்துகிறது. எக்லிப்ஸ் ADTயில் பயன்படுத்தப்படும் build system ANT ஆகும். Gradle build system வெவ்வேறு பதிப்புகளில் மென்பொருளை உருவாக்குவதற்கான வழிகளை எளிமைப் படுத்தும். நாளுக்கு நாள் பெருகி வரும் வெவ்வேறு ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கும், இலவச/காசு கொடுத்து வாங்க வேண்டிய பதிப்புகள் என பல்வேறு வகைகளிலும் வகையினருக்கும் மென்பொருள் எழுதி பராமரிப்பது கடினமான செயல். இந்நிலையில் Gradle போன்ற புதிய தலைமுறை build systemஐ தாங்கி வருவது பல்வேறு வல்லுநர்களால் வரவேற்கப்படுகிறது. எக்லிப்ஸில் உருவாக்கப்படும் project அமைப்பிற்கும் ஆண்ட்ராய்ட் ஸ்டூடியோவில் உருவாக்கப்படும் project அமைப்பிற்கும் சிறுசிறு வேறுபாடுகள் உள்ளது. எனவே எக்லிப்ஸில் உருவாக்கிய ஆண்ட்ராய்ட் projectகளை அப்படியே ஆண்ட்ராய்ட் ஸ்டூடியோவில் பயன்படுத்த முடியாது. இக்குறையைக் களைய ஆண்ட்ராய்ட் ஸ்டூடியோ இடமாற்ற உதவி (migration assitance) சாளரத்துடன் (window) வருகிறது.
இக்கருவி முழுமையான பயன்பாட்டிற்கு இன்னும் வெளியிடப்படவில்லை. தொடக்க நிலையில் இருக்கும் இக்கருவி ஆண்ட்ராய்ட் மென்பொருள் உருவாக்கத்திற்கு முதன்மைப் படுத்தும் வரையில் ஏற்கனவே இருக்கும் ADT மென்பொருளையே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப் படுகிறது. இப்படிச் சொன்னா யாரு கேட்பா?!!!