மார்ச் 02, 2014

NodeJS

NodeJS வேகமாக வளர்ந்துவரும் ஒரு தொழில்நுட்பம்.  வெற்றியடைந்த பல ஓப்பன் சோர்ஸ் தொழில்நுட்பங்களின் பட்டியலில் தனக்கென ஒரு முத்திரையைப் படைத்துள்ளது.  நிறுவன பயன்பாட்டிற்கான தொழில்நுட்பங்கள் பலகட்ட சோதனை ஓட்டங்களுக்குப் பிறகே ஏற்றுக்கொள்ளப் படுகிறது. 

கோடிக்கணக்கில் ஏற்கனவே முதலீடு செய்திருக்கும் முதலீடுகளிலிருந்து ஒரு இரவில் எந்த நிறுவனமும் மாறப் போவதில்லை, அதற்கான அவசியமும் இல்லை. ஜாவா, டாட் நெட், பி.எச்.பி போன்ற தொழில்நுட்பங்கள் பல ஆண்டுகளாய் இன்றும் வெற்றிகரமாய்த் தொடர்கின்றன.  தன்னை காலத்திற்கேற்ற வகையில் புதுப்பித்துக் கொள்ளும் அனைத்து தொழில்நுட்பங்களும் ஒருபோதும் மறைந்துவிடப் போவதில்லை.  வேறு எந்த விதத்தில் NodeJS அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறதென இக்கட்டுரையில் பார்ப்போம்.  முதலில் இத்தொழில்நுட்பத்தை யார் யார் பயன்படுத்துகிறார்கள் என்ற பட்டியலே ஆர்வத்தை மேலும் கிளிர்த்தெழச் செய்கிறது.  இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் குறிப்பிடத்தக்க சில நிறுவனங்கள் Linkedin, Yahoo, Microsoft, Sony, Walt Disney, PayPal Wallmart, eBay. இன்னும் எவ்வளவோ நிறுவனங்கள்.. அப்பப்பா!!!

முக்கிய நோக்கம் - நெட்வொர்க் அப்ளிகேஷன்களை எளிதாக உருவாக்குவது.

கூகுள் க்ரோம் பிரவுசரின் ஜாவாஸ்கிரிப்ட் என்ஜினை அடியொற்றி எழுதப்பட்டது.  V8 இதுதான் க்ரோம் ப்ரவுசரில் அத்தனை ஜாவாஸ்கிரிப்ட் கட்டளைகளையும் இயக்குகிறது.  சி மொழியில் எழுதப்பட்ட V8 ஒரு திறன்மிக்க நெட்வொர்க் புரொகிராமும் கூட.  இதனின் மூல நிரலை கூகிள் திறமூல மென்பொருளாக வெளியிட்டது.  இருப்பினும் நெட்வொர்க் அப்ளிகேஷன்களை சி மொழியில் எழுதுவது அவ்வளவு சுலபாக பெரும்பாலானோருக்கு இல்லை.  இதனைக் கருத்தில் கொண்டு Riyan Dhal என்பவர் ஜாவாஸ்கிர்ப்ட் மூலமாக  V8ன் சி நிரலோடு சுலபமாக தொடர்பு கொள்ள ஏற்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்தான் NodeJS.  இதில் நாம் எழுதப்போவது முழுக்க முழுக்க ஜாவாஸ்கிரிப்ட்தான்.  ஆனால் பின்னே இருந்து இயங்குவது சி மொழி என்பதால் இதன் பயன்பாடுகளையும் ஆற்றலையும் சொல்லவா வேண்டும்.

பொதுவாக நாம் எல்லோரும் ஜாவாஸ்கிரிப்ட்டை வெப் பக்கங்களில்தான் பார்த்திருப்போம். இப்போது NodeJSன் உதவியால் ஜாவாஸ்கிர்ப்ட் சர்வர் பக்கத்திலும் சக்கை போடு போடுகிறது.

மேலும் விவரங்களை அடுத்த கட்டுரையில் காண்போம்.

ஜனவரி 12, 2014

வலைப்பக்க உருவாக்கக் கருவி Brackets editor

         வலைதள வடிவமைப்பிற்கு HTML, CSS ,Javascript போன்ற பல தொழில்நுட்ப மொழிகளை பயன்படுத்த வேண்டும்.  வலைதள வடிவமைப்பிற்கென்றே பல உருவாக்கக் கருவிகள் உள்ளன.  முதல்முறையாக பயிலும் புதியவர்கள் Notepad, Notepad++,  Gedit போன்ற டெக்ஸ்ட் எடிட்டர்களை ஆரம்ப நிலையிலும், தொழில்முறை வடிவமைப்பாளர்கள் Dreamwork, VisualStudio, AptanaStudio,FireBug, Sublime, Chrome Developer Tools... போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்துகின்றனர்.  இது ஒவ்வொரு வடிவமைப்பாளரைப் பொருத்தும், அவர் பயன்படுத்தும் இயக்கச்சூழல் (OS) பொருத்தும் மாறுபடும்.      இவ்வரிசையில் Brackets என்கிற புதிய மென்பொருள் கருவி சேர்ந்துள்ளது.  முதல் முறை பயன்படுத்துபவரை திரும்பப் திரும்ப பயன்படுத்த வசீகரிக்கும் இக்கருவி முற்றிலும் இலவசமாகக் கிடைப்பது சிறப்பு.  இலவசமாக மட்டுமல்ல இது ஒரு திறமூல மென்பொருள் (open source) என்பது கூடுதல் சிறப்பு. 


எந்த தொழில்நுட்பத்திற்காக உருவாக்கப் பட்டதோ, அதே தொழில்நுட்பத்தில்தான் இது உருவாக்கப் பட்டிருக்கிறது.  அதாவது HTML5, Javascript மூலமாக உருவாக்கப்பட்ட தனிமேசைக் கருவி (desktop application).  அடோப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு திறமூலமாக வெளியிடப்ப இக்கருவியின் வளர்ச்சியில், உலகெங்கிலும் இருக்கும் ஜாவாஸ்கிரிப்ட் டெவலப்பர்கள் பங்களிக்கிறார்கள்.  இதை உருவாக்கியவர்கள் தத்தம் பயன்பாட்டிற்கு எவையெல்லாம் சிறப்பு சேர்க்குமோ அனைத்தையும் பார்த்து பார்த்து சேர்த்திருக்கிறார்கள்.தொடக்க நிலையில் மேக் இயக்கச் சூழலில் மட்டும் வெளிவந்த இக்கருவி தற்போது விண்டோஸ், உபுண்டு இயக்கச் சூழலிலும் கிடைக்கிறது.  இக்கருவிக்கான நீட்சிகள் (extensions) ஜாவாஸ்கிரிப்டிலேயே எழுதப்படுவதால் எண்ணற்ற கூடதல் வசதிகளைக் கூட்டிக் கொள்ளலாம்.

ஜூலை 30, 2013

ஆண்ட்ராய்ட் ஸ்டூடியோ


        ஆண்ட்ராய்ட் மென்பொருள் உருவாக்கத்திற்கு கூகுள் நிறுவனம் ஒரு புதிய மென்பொருளை வெளியிட்டுள்ளது.  ஆண்ட்ராய்ட் ஸ்டூடியோ எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கருவி, ஜாவா மென்பொருள் உருவாக்கக் கருவியான Jetbrains IntelliJ IDEAயாவைத் தழுவியது.  ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஆண்ட்ராய்ட் டெவலப்மெண்ட் கருவியை (ADT) விட இந்த புதிய மென்பொருள் பயன்படுத்த எளிமையானதாகவும், வேகமானதாகவும், பல்வேறு சிறப்பம்சங்களுடனும் வடிவமைக்கப் பட்டுள்ளது.  ஆண்ட்ராய்ட் மென்பொருள் உருவாக்கத்திற்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இக்கருவி நீண்ட நாட்களாகவே எதிர்பார்த்திருந்த ஒன்று.


ஆண்ட்ராய்ட் ஸ்டுடியோ Gradle என்கிற புதிய build systemஐ பயன்படுத்துகிறது.  எக்லிப்ஸ் ADTயில் பயன்படுத்தப்படும் build system ANT ஆகும்.  Gradle build system வெவ்வேறு பதிப்புகளில் மென்பொருளை உருவாக்குவதற்கான வழிகளை எளிமைப் படுத்தும்.  நாளுக்கு நாள் பெருகி வரும் வெவ்வேறு ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கும், இலவச/காசு கொடுத்து வாங்க வேண்டிய பதிப்புகள் என பல்வேறு வகைகளிலும் வகையினருக்கும் மென்பொருள் எழுதி பராமரிப்பது கடினமான செயல்.  இந்நிலையில் Gradle போன்ற புதிய தலைமுறை build systemஐ தாங்கி வருவது பல்வேறு வல்லுநர்களால் வரவேற்கப்படுகிறது.  எக்லிப்ஸில் உருவாக்கப்படும் project அமைப்பிற்கும் ஆண்ட்ராய்ட் ஸ்டூடியோவில் உருவாக்கப்படும் project அமைப்பிற்கும் சிறுசிறு வேறுபாடுகள் உள்ளது.  எனவே எக்லிப்ஸில் உருவாக்கிய ஆண்ட்ராய்ட் projectகளை அப்படியே ஆண்ட்ராய்ட் ஸ்டூடியோவில் பயன்படுத்த முடியாது.  இக்குறையைக் களைய ஆண்ட்ராய்ட் ஸ்டூடியோ இடமாற்ற உதவி (migration assitance) சாளரத்துடன் (window) வருகிறது.
இக்கருவி முழுமையான பயன்பாட்டிற்கு இன்னும் வெளியிடப்படவில்லை.  தொடக்க நிலையில் இருக்கும் இக்கருவி ஆண்ட்ராய்ட் மென்பொருள் உருவாக்கத்திற்கு முதன்மைப் படுத்தும் வரையில் ஏற்கனவே இருக்கும் ADT மென்பொருளையே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப் படுகிறது.  இப்படிச் சொன்னா யாரு கேட்பா?!!!