ஏப்ரல் 05, 2012

HTML5 தோற்றமும் வளர்ச்சியும்


இணையப் பக்கங்களை வடிவமைக்க உதவும் மொழி HTML.  Hyper Text Markup Language என்பதன் சுருக்கமே HTML ஆகும். HTML பயனர் இடைமுகப்பு (user interface/UI) உருவாக்கத்தில் தவிர்க்க இயலாத ஓர் தொழில்நுட்பமாக ஆகிவிட்டது.  மார்க்கப் மொழிகள் புரோகிராமிங் கட்டளைகளை செயல்படுத்துபவை அல்ல, மாறாக ஒரு ஆவணத்தின் கட்டமைப்பை (document structure) விவரிப்பவை.  

மார்க்கப் மொழிகள் புரோகிராமிங் மொழிகளிடமிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை http://tamilcpu.blogspot.in/2012/02/xml.html என்ற பதிவில் பார்க்கவும். HTML டேகுககளால் வடிவமைக்கப் பட்ட இணைய பக்கத்தை (web page) உலாவிகள் (browsers) பயனருக்கு தோற்றுவிக்கின்றன.

1989ல் HTML உருவாக்கத்திற்கான பிள்ளையார் சுழியைப் போட்டவர் திரு. டிம் பேர்னர்ஸ் லீ. ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் (European Organization for Nuclear Research, CERN) பணிபுரிந்த இவரே இணைய வலையின் (WWW - World Wide Web) தந்தையாக அழைக்கப்படுகிறார்.  HTMLலின் முதல் பதிப்பு 1991ல் வெளிவந்தது.  HTMLன் பதிப்புகளை வெளியிட்டதில் IETFம் (Internet Engineering Task Force), W3Cயும் (World Wide Web consortium) முக்கியமானவை.  தற்போது HTML5 பதிப்பின் வளர்ச்சியை நிர்வகித்து வரும் அமைப்பு (WHATWG (Web Hypertext Application Technology Working Group) ஆகும். WHATWG அமைப்பை உருவாக்கியது ஒபேரா, மொசில்லா மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள். HTML5க்கு முன்னர் இணைய தகுதரங்களை (web standards) நிர்ணயிக்கும் W3C அமைப்பு XHTML2.0வை முன்னிலைப் படுத்தி வந்தது.  இதற்கு பிரவுசர் தயாரிப்பாளர்களிடமும், டெவலப்பர்களிடமும் பெருமளவு ஆதரவு கிடைக்காதலால் பின்னர் HTML5க்கு கவனம் மாற்றப் பட்டது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் அனைத்து முன்னனி பிரவுசர்களும் HTML5வை ஆதரிக்கும். குரோம் (Google Chrome), ஃபயர்பாக்ஸ் (Mozilla Firefox) , சஃபாரி (Apple Safari), Opera, IE9 ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.  HTML5ன் எளிமையே அதன் வெற்றிக்கு வித்திட்டது.  ஒரேயொரு வரியில் ஒரு விடீயோவை இணைத்துக் கொள்ள முடியும். இணையதளத்தின் முகப்பு பக்கத்தை அலங்கரித்த ஃப்ளாஷின் (Adobe Flash) இடத்தை HTML5 கைபற்றி வருகிறது.  

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோன், ஐபேட் சாதனங்கள் ஃப்ளாஷை ஒருபோதும் ஆதரிக்காதது என பகிரங்கமாத் தெரிவித்தார்.  மாறாக HTML5 தான் இணைய பயன்பாடுகளின் எதிர்காலமென தீர்க்க தரிசனமாய் சொல்லி விட்டு சென்று விட்டார். இதை ஃப்ளாஷின் சொந்தக் காரணான அடோப் நிறுவனமே ஒப்புக் கொண்டு சரணடைந்ததென்றால் HTML5ன் வெற்றியைப் புரிந்து கொள்ளுங்கள்.  அடோப் தன்னுடைய மற்றொரு மென்பொருளான ட்ரீம்வீவரில் (Dreamweaver CS5.5) HTML5வை முன்னிலைப் படுத்தி வருகிறது.

அன்றாடம் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெறும் ஃபேஸ்புக், டிவிட்டர், கூகிள் இணையப் பக்கங்கள் HTML5ல் உருவாக்கப் பட்டவையே.  இந்தத் தளங்களின் view page source பார்த்தீகளேயானால் என்ற முதல்வரி இருப்பதைக் காணலாம்.  இது HTML5 பதிப்பு பயன்படுத்தப் பட்டிருப்பதைக் குறிக்கிறது.

HTML5ன் அசுர வளர்ச்சிக்கான மற்றொரு முக்கியமான காரணம் மொபைல் இணைய இணைப்புகள்.  மொபைல் இணைய பக்கங்களை உருவாக்க HTML5 மிகச்சிறந்த தீர்வாகும். 
  
எடுத்துக்காட்டிற்கு www.facebook.com கணினிகளுக்கு ஏற்பதாகவும்m.facebook.com  மொபைலுக்கு ஏற்பதாகவும் வடிவமைக்கப் பட்டிருப்பதைக் காணுங்கள்.  மொபைல் இணைய பக்கங்களுக்கு மட்டும் என்றில்லாமல், மொபைல் மென்பொருள் உருவாக்கத்திலும் HTML5 சக்கை போடு போடுகிறது.  ஐபோனுக்கு அப்ஜெக்டிவ் சி, ஆண்ட்ராய்டுக்கு ஜாவா, விண்டோஸ் மொபைலுக்கு சி#.நெட் என வெவ்வேறு புரோகிராமிங் மொழியை பயன்படுத்துவதைக் காட்டிலும், இவ்வனைத்து மொபைல்களிலும் இயங்கும் HTML5, ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் CSS மூலம் மொபைல் மென்பொருட்களை உருவாக்க, மென்பொருள் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. தாமதிக்காமல் HTML5 கற்றுக் கொள்ளுங்கள்.  நீங்கள் படிக்கிறீர்களோ இல்லையோ, உங்கள் அன்றாட இணைய உலகில் HTML5 பின்னிப் பிணைந்திருப்பதை உணர்ந்திருங்கள்.

பி.கு: இக்கட்டுரை கம்ப்யூட்டர் உலகம் ஏப்ரல் 2012 இதழில் வெளிவந்துள்ளது. 

ஏப்ரல் 02, 2012

மொபைல் டெவலப்பர்களின் தேவை அதிகரிக்கிறது

சென்ற வருட ஸ்மார்ட் போன்களின் விற்பனை எண்ணிக்கை (487.7 மில்லியன்) ஒட்டுமொத்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் மற்றும் நெட்புக்குகள் (414.6 மில்லியன்) விற்பனையை மிஞ்சி விட்டதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையின் போக்கினை கோடிட்டுக் காட்டும் கார்ட்னர், ஐ.டி.சி, கனாலிசிஸ் போன்ற ஆய்வறிக்கை நிறுவனங்கள் வெளியிடும் மொபைல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி பற்றிய தகவல்கள் பிரமிப்பூட்டுவையாக இருக்கிறது.

விலை அதிகம் உள்ள ஆப்பிள் 4S, 3GS மொபைல்களின் விற்பனை முந்தைய ஆண்டு விற்பனை சாதனைகளையெல்லாம் முறியடித்து விட்டது.  ஆண்ட்ராய்ட் இயக்கச் சூழலில் வரும் சாம்சங் மொபைல் போன்கள், டேப்லட்களின் விற்பனை விகிதமும் ஏறுமுகமாகவே இருக்கிறது.  இதில்லாமல் சோனி, மோட்டோரோலா, எல்.ஜி, எச்.டி.சி, ஏசர், விண்டோஸ் மொபைல் எனப் பிரபல தயாரிப்புகளுக்கும் பஞ்சமே இல்லை.

குறைந்தபட்ச விலை கொண்ட மொபைலும் பேசுவதற்காக மட்டுமே வாங்கப்படுவதில்லை என்பதை அறிவோம். கேமரா, எம்.பி3 போன்ற வசதிகள் அடிப்படைத் தேவையாகிவிட்ட நிலையில் டச் ஸ்கிரீன் போன்ற வசதிகள் உங்களுக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தைத் தரும். முப்பதாயிரத்தில் இருந்துதான் தொடக்க விலையே என்ற நிலை போய் மூவாயிரத்திற்குக் கூட ஸ்மார்ட் போன்கள் கிடைக்கின்றது. இலவச மொபைல் இயக்கச் சூழலான ஆண்ட்ராய்ட் வந்தபிறகு அதிநவீன வசதிகள் கொண்ட மொபைல் சாதனங்கள் சாமானியர்களும் அணுகும்படியாக உள்ளது.

மொபைல் வழியான இணைய தேடல்கள், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைபின்னல் உலாக்கள் டெஸ்க்டாப் கணினிகள் வழியே அனுகும் இணைய பயன்பாடுகளை மிஞ்சும் வண்ணம் இருக்கிறது. வங்கிக் கணக்கை கையாள்வது முதல் இணைய முன்பதிவு வரை ஒட்டுமொத்த டிஜிட்டல் உலகமும் உள்ளங்கையில் அடங்கி விடுகிறது. ஸ்மார்ட் பொன்களின் விலை குறையும்போது இவற்றின் பயன்பாட்டுச் சதவிகிதம் இன்னும் ஏறுமுகத்தில் இருக்கும்.  ஒரு துறை வளரும்போது அந்தத் துறையில் பணியாற்ற அதிக ஆட்கள் தேவைப்படுவது இயற்கை நியதி. மொபைல் மென்பொருட்களை உருவாக்கும் திறனுள்ள வல்லுனர்களின் தேவை மின்னல் வேகத்தில் எகிறிக் கொண்டே போகிறது. ஐபோன், ஆண்ட்ராய்ட் போன்ற நவீன மொபைல்களுக்கு மென்பொருள் எழுதும் டெவலப்பர்களின் தேவையில் பெரியளவு தட்டுப்பாடு நிலவுகிறது.

மொபைல் சாதனங்களுக்கு மென்பொருள் உருவாக்க முற்றிலும் மாறுப்பட்ட அணுகும் முறை தேவைப்படுகிறது. டெஸ்க்டாப் கணினியில் இருப்பது போன்ற நினைவகமோ (memory), செயலியோ (processor) மொபைல் சாதனத்தில் இருக்காது.  நீண்ட நேரம் மின்கலத்தில் (battery) சக்தி இருக்க தேவைக்கு மிஞ்சி எந்த வளங்களையும் பயன்படுத்தாத வண்ணம் மொபைலுக்கான மென்பொருளை வடிவமைக்க வேண்டும். இவற்றையெல்லாம் நம் பாடதிட்டதில் படிப்பதற்குள் இலட்சக்கணக்கான மென்பொருள் பொறியாளர்கள் இந்த தொழில்நுட்பங்களில் பணியாற்றிக் கொண்டிருப்பார்கள் என்பதை அறிய வேண்டும். அதற்குள் தற்போதைய இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பாடத்திட்டதைத் தாண்டி படிப்பவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.



பி.கு: இக்கட்டுரை கம்ப்யூட்டர் உலகம் மார்ச் 2012 இதழில் வெளிவந்துள்ளது. இதுவே ஒரு மாத இதழில் எழுதிய எனது முதல் கட்டுரை. இக்கட்டுரையை வெளியிட்டு ஊக்கப்படுத்திய கம்ப்யூட்டர் உலகம் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.