ஆகஸ்ட் 17, 2010

ஜாவாவில் புரொகிராம் செய்ய என்னென்ன அவசியம் தேவை? -- ஜாவா தொடர்

ஜாவா குறித்து அடிப்படைத் தகவல்களைக் கொஞ்சம் தெரிந்து கொண்டு விரைவில் நிரலெழுத குதித்து விடலாம்.  அதற்கு முன்னர் ஜாவா மெய்நிகர் கணினி குறித்து சிறிது தெரிந்து கொள்வோம். 

மேலான விவரங்களுக்கு விக்கீபீடியாவிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.
புதியவர்களுக்கு ஒரு தகவல்: தமிழில் தொழில்நுட்ப தகவல்களைப் பெறத் தமிழிலேயே தேடுங்கள். எடுத்துகாட்டிற்கு java tamil tutorial எனத் தேடுவதற்கு பதில் ”ஜாவா கட்டுரை” போன்ற குறிப்புகளைக் கொடுத்து தேடலாம்.

ஜாவா நிரலை இயக்க என்னென்ன தேவை?

ஜாவா நிரலை எழுதுவதற்கு பெரிதாக ஒன்றும் தேவையில்லை. ஏதேனும் ஒரு உரை பதிப்பி (text editor) இருந்தால் போதுமானது.  எடுத்துகாட்டிற்கு விண்டோசில் நோட்பேடிலும் லினக்சில் ஜிஎடிட், கேஎடிட்டர்,  விஐ... போன்ற மென்கலங்களிலும் எழுதிக் கொள்ளலாம்.  அதை கணினிக்கு புரியும்படி எப்படி மாற்றுவது? (கணினிக்கு அவற்றின் மொழியான இரும மொழி தவிர வேறு மொழி தெரியாது).  உயர்நிலை மொழியிலிருந்து இரும மொழிக்கு (binary/machine language) மாற்ற ஒரு மொழிமாற்றி (compiler) தேவைப்படுகிறது. அதை எப்படிப் பெறுவது? என்ன விலை இருக்கும்?


  javac என்பதுதான் ஜாவாவை மொழிமாற்றும் (கம்பைல் செய்யும்) நிரல்.  இந்த பயன்பாடு ஜே.டி.கே (JDK- Java Development Kit) என்னும் மென்பொருள் தொகுப்புடன் வருகிறது.  நீங்கள் ஜாவாவில் புரோகிராம் செய்ய ஜே.டி.கே மிகமிக அவசியம்.  ஜே.டி.கே இணையத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.  அல்லது டிஜிட்,பிசிகுவெஸ்ட்.. போன்ற ஆங்கில கணினி மாத இதழ்களுடன் வரும் குறுவட்டிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.


ஜே.டி.கே தொகுப்பில் ஜே.ஆர்.இ (JRE- Java Runtime Engine) என்கிற துணை தொகுப்பு இருக்கிறது.  ஜாவா நிரலை இயக்குவதற்கு ஜே.ஆர்.இ அவசியமானது.  ஜே.ஆர்.இ நிறுவப்படாத கணினியில் ஜாவா நிரலை இயக்குவதற்கான கட்டளையான java என்பதை விண்டோஸ் கமாண்ட் ப்ராம்ப்டிலோ, லினக்ஸ் டெர்மினலிலோ கொடுத்தால் java: command not found, java not installed போன்ற பிழை செய்தி தோன்றும்.  இந்த பிழைசெய்தி உங்கள் கணினியில் தோன்றினால் ஜாவா நிரல்களை இயக்கக் கூடிய ஜே.ஆர்.இ தொகுப்பு உங்கள் கணினியில் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.


ஜே.டி.கே இல்லாவிட்டாலும் ஜாவா நிரலை இயக்க முடியும், ஆனால்  ஜே.ஆர்.இ இல்லாமல் முடியாது.

என்னய்யா கொஞ்ச நேரம் முன்புவரை ஜே.டி.கே அவசியமென்று சொல்லிவிட்டு, இப்போது தேவையில்லைன்னு சொன்னா மண்டை காயாதா எனக் கேட்கிறீர்களா. 

சற்று உற்று கவணிக்கவும்.  ஜே.டி.கே இல்லையென்றால் நாம் எழுதிய நிரல்களை மொழிமாற்றம்/ கம்பைல் (ஜாவாவிலிருந்து பைட் நிரலிற்கு) செய்ய இயலாது.  ஜே.ஆர்.இ இல்லையென்றால் பிறர் உருவாக்கி வைத்திருக்கும் (ஏற்கனவே மொழிமாற்றி வைத்திருக்கும்) கோப்புகளையும் இயக்க இயலாது.  ஜே.ஆர்.இயை மட்டும் தனியாக நிறுவிக் கொள்ளலாம், அல்லது ஜே.ஆர்.இயையும் தன்னுள் அடக்கிய பெரிய தொகுப்பான ஜே.டி.கேவை நிறுவிக் கொள்ளலாம்.
 • ஜாவாவில் மென்பொருளை/நிரல்களை உருவாக்க ஜே.டி.கே தேவை.
 • ஜாவாவில் உருவாக்கிய மென்பொருளை/நிரலை இயக்க ஜே.ஆர்.இ தேவை.
java கட்டளை ஜாவா நிரலை இயக்க பயன்படுகிறது.  இது ஜே.ஆர்.இ யுடனே வந்துவிடும்.  ஜாவா நிரலை கம்பைல் செய்ய உதவும் javac கட்டளை ஜே.ஆர்.இயுடன் வராது.

javac கட்டளையை இயக்க ஜே.டி.கே நிறுவப்பட்டிருக்க வேண்டும்.  ஜே.டி.கே, ஜே.ஆர்.இ இவை இரண்டுமே அனைத்து இயக்க சூழல்களுக்கும் கிடைக்கின்றன. விண்டோசுக்கு .exe கோப்பாகவும், லினக்சுக்கு .rpm,.deb,.bin... கோப்பாகவும், மேக் இயங்குதளத்திற்கு .dmg கோப்பாகவும் கிடைக்கின்றது.

ஜே.வி.எம் (JVM- Java Virtual Machine) என்பதுதான் ஜாவாவை இயக்குகிற மைய மென்கலம்.  ஜாவாவை இயக்குவதற்கான் இதயம் போன்றது.  தமிழில் இதை ஜாவா மெய்நிகர் கணினி என்று அழைக்கலாம்.  இதன் பயன் என்ன? இதை எப்படி நிறுவது? எனப் பல கேள்விகள் எழலாம்.

ஜே.வி.எம்மை நீங்கள் தனியாக நிறுவ வேண்டியதில்லை.  ஜே.வி.எம் என்பது ஜே.ஆர்.இக்குள் அடக்கம். JDK<----JRE<------JVM.  நீங்கள் எழுதிய ஜாவா நிரலை ஜாவா மெய்நிகர் கணினிதான் இயக்குகிறது.  ஜாவா நிரல்கள் .java என்கிற கோப்பாக இருக்கும். 
javac மொழிமாற்றி அதனை .class கோப்பாக மாற்றித் தரும்.  ஒரு மொழிமாற்றியின் வேலை உயர்நிலை மொழியிலிருந்து இரும மொழிக்கு மாற்றுவதுதான் என ஏற்கனவே பார்த்தோம்.  இன்னொன்றையும் புரிந்து கொண்டால் இதை உள்வாங்கிக் கொள்ள எளிமையாய் இருக்கும்.  


இரும மொழி கோப்புகள் (binary files) எந்த நீட்டிப்பில் (extension) இருக்கும்?  விண்டோசில் .exe என்று இருக்கும்.  லினக்சில் .bin என்று இருக்கும்.  அதுசரி பின்னர் ஏன் .java கோப்பு .exe கோப்பாகவோ .bin கோப்பாகவோ இல்லாமல் .class என்கிற ஒரு புது நீட்டிப்புடன் உருவாகிறது.

இதன் பின்னனியில்தான் இருக்கிறது ஜாவாவின் அடிப்படைத் தத்துவம்.  நேரமின்மையால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பகிர்ந்து கொள்ள முடிகிறது.  அடுத்த பதிவில் எக்லிப்ஸ் மென்பொருளை எவ்வாறு பயன்படுத்தலாம் என விரிவான விளக்கங்களுடன் (படங்களுடன்)  அடுத்த பதிவில் பார்க்கலாம்.  அதுவரை எக்லிப்ஸ் குறித்து கீழ்காணும் பதிவில் மேலோட்டமாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

--தொடரும்

13 கருத்துகள் :

 1. நான் CSE ENGG படிக்கிறேன் . எக்லிப்ஸ் பயன்படுத்தினால் ஜாவா ப்ரோக்ராம் மரந்து போகும் என்று அசிரியர் சொல்கிறாரே ! இது உண்மையா ! இதற்கு பதில் கொடுக்கவும்.

  பதிலளிநீக்கு
 2. SUN CERTIFICATION பற்றி கூறுங்கள்

  பதிலளிநீக்கு
 3. நிச்சயமாக அதில் உண்மையில்லை மணிகண்டன். தேர்வுகள் மதிப்பெண்களை வழங்குவதற்குதான் என்கிற சித்தாந்தத்தில் விளைந்த கருத்து அது. எக்லிப்ஸ் மட்டுமில்லை நெட்பீன்ஸ், ப்ளூஜே போன்ற எந்தவொரு ஒருங்கிணைந்த உருவாக்க சூழல்களிலும் ஜாவா பழகலாம். வெறும் டெக்ஸ்ட் எடிட்டரில் எழுதும் ஜாவா நிரல்களில் பிழைகள் மலிந்ததாக இருக்கும். நன்கு அனுபவமுள்ளவர்களே கடினத்தை உணரும்போது நம்மைப் போன்று கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு ஓரிரு நிரல்களிலேயே மனம் நொந்து ஜாவாவை கடிந்து கொள்வோம். இதில் பாவம் செய்தவர்கள் மாணவர்கள்தான். இப்போது ஒன்றை நன்றாக புரிந்து கொண்டேன், முதலில் ஜாவா கற்றுத்தரவேண்டியது ஆசிரியர்களுக்கே ஒழிய மாணவர்களுக்கு இல்லை. உங்களிடம் என்ன ஐ.டி.இ இருக்கிறதோ அதில் பழகுங்கள். என்னைக் கேட்டால் ஐ.டி.இ பயன்படுத்த முடியவில்லையென்றால் ஜாவா கற்பதை நிறுத்தி விடலாம். மேலான விவரங்களை அடுத்த கட்டுரையில் காணலாம். எங்களுக்குத்தான் சொல்லித்தர ஆளில்லை. கவலையை விடுங்கள் எளிதாய் ஜாவாவைக் கற்றுக் கொள்ளலாம். முதல் வேலையாக உங்கள் கணினியில் எக்லிப்சை நிறுவங்கள். பின்னர் பாருங்கள் அதே ஆசிரியர் மற்ற மாணவர்களை உங்களிடமிருந்து ஜாவா கற்றுக் கொள்ள சொல்லுவார். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. திரு. மணிகண்டன் உங்கள் ஆசிரியர் மட்டுமில்லை என் ஆசிரியரும் அப்படித்தான் நடந்து கொண்டார். நீங்கள் கேட்டதற்கு பதில் இந்த பதிவிலேயே இருக்கிறது.
  http://tamilcpu.blogspot.com/2010/05/blog-post.html

  பதிலளிநீக்கு
 5. திரு.அறிவு சன் சான்றிதழ் படிப்பைக் குறித்து அவ்வளவாக அறியவில்லை. நண்பர்களிடம் கேட்டு சொல்கிறேன். அருகிலிருக்கும் NIIT பயிற்சி நிறுவன கிளையில் விசாரிக்கவும். பயிற்சியை நீங்களாகவே எடுத்துக் கொண்டு தேர்வுக்கு மட்டும் பணம் செலுத்தி தேர்வெழுதலாம். தோராயமாக தேர்வுக்கு மட்டும் ஆறாயிரம் வருமென நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. நான் அறிவொளி. B.Sc(cs)மாணவன். jAVA பயிற்சியை நானாகவே எடுத்துக் கொண்டு தேர்வு எழுத என்ன வகையான பயிற்சிகள் எடுக்க வேண்டும்?

  பதிலளிநீக்கு
 7. கூகிளில் SCJP (Sun Certified Java Developer) books எனத் தேடி pdf புத்தகங்களை பதிவிறக்கிக் கொள்ளவும். பயிற்சி நிறுவனங்களிலும் புதிதாக ஒன்றையும் கற்றுத்தர போவதில்லை. நீங்களே புத்தங்களில் மூலம் கற்றுக் கொள்ளலாம். பி.எஸ்.சி முடித்துவிட்டு மேற்படிப்பு படிக்க திட்டமிட்டிருந்தால் தாராளமாக சான்றிதழ் படிப்பை கொஞ்சம் தள்ளிப் போடுங்கள்.

  பதிலளிநீக்கு
 8. உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளன. சக தொழிற்நுட்ப பதிவராக தங்களுக்கு நன்றி கூறுகிறேன்!

  பதிலளிநீக்கு
 9. திரு. எஸ்.கே ப்ளாஷ் பயனர்களுக்கு மிக அருமையான படைப்புகளைத் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி. அனைத்து பள்ளிகளிலும் இணைய இணைப்பு பரவலாகும்போது மாணவர்களுக்கு தாய்மொழியில் அனைத்து தகவல்களையும் கற்பது எளிமையாகவும் ஆர்வமளிப்பதாகவும் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 10. அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் சாரே ...

  பதிலளிநீக்கு
 11. திரு.ரவி உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். மேக் OSல் தமிழ் கட்டுரையை ஒரு நண்பருக்கு அறிமுகம் செய்ததற்கு முதலில் என் நன்றிகள். எழுதுவதற்கு தயாராகதான் இருக்கின்றேன். கணினி கிடைப்பதில்தான் சிறு சிக்கல். நான் என் நண்பர்களின் கணினியைத்தான் பயன்படுத்துகிறேன். அவர்களின் தேவை போக மீதி நேரத்தில்தான் பயன்படுத்துவதுண்டு. சனி,ஞாயிறு வந்துவிட்டது. பதிவிட்டுவிடுவோம்.

  பதிலளிநீக்கு